புவனேஸ்வரம்: ஜார்க்கண்ட்டின் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தீரஜ் சாகுவுக்குச் சொந்தமான நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.351 கோடி ரொக்கத்தை எண்ண, 50 வங்கி ஊழியர்களும், 40 பணம் எண்ணும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பணத்தை எண்ணும் பணி மணிக்கணக்கில் நடந்ததாகவும், சில பணம் எண்ணும் இயந்திரங்கள், பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும்போதே உடைந்துள்ளன. இயந்திரத்தை சரி செய்பவர் உடன் இருந்ததாகவும் பணியின்போது கோளாறு ஏற்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒடிஸாவில் மதுபான உற்பத்தி நிறுவனம் மீதான வருமான வரித் துறைச் சோதனையில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.351கோடி என்று கூறப்படுகிறது.
மேற்கு ஓடிஸாவின் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான பல்தேவ் சாஹு குழுமத்தின் மீதான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டை அடுத்து அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள், நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவா்களுக்குத் தொடா்புடைய இடங்களில் வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டது. சோதனை 5வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது.
கைப்பற்றப்பட்ட மொத்த பணமும், நாட்டு மதுபானத்தை விற்று குழுமம், விநியோகிஸ்தா்கள், பிறா் சம்பாதித்த கணக்கில் வராத கருப்புப் பணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த நிறுவனத்துடன் தொடா்புடையதாக காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் பிரசாத் சாஹு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்து தற்போதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நாட்டில் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் அல்லது தனிநபா் மீதான ஒரே சோதனையில் புலனாய்வு அமைப்பால் பறிமுதல் செய்யப்படாத அதிகபட்ச தொகை இதுவாகும் எனக் கூறப்படுகிறது.
இதற்கு முன் கான்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த தொழிலதிபரிடம் இருந்து கடந்த 2019ல் ரூ.257 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் சாலை கட்டுமான நிறுவனத்திடம் இருந்து கடந்த 2018ல் ரூ.163 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தத் தொகை குறித்து தீரஜ் பிரசாத் சாஹாவிடம் காங்கிரஸ் விளக்கம் கேட்டுள்ளது.
“காங்கிரஸ் எம்பியாக இருப்பதால் தீரஜ் சாஹுவிடம் எங்கிருந்து அவருக்கு இவ்வளவு பணம் வந்தது என்பது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது. மற்றபடி, இது அவருடைய தனிப்பட்ட விவகாரம். இதற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்பதில் கட்சித் தலைமை உறுதியாக உள்ளது,” என்று பிர்சா முண்டா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டே தெரிவித்தார்.