சிக்கிம்: திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கு மூன்று நாள் பயணமாக திங்கட்கிழமை காலை வருகை அளித்தார்.
மாநிலத்தின் பல்வேறு மடங்களின் துறவிகளும் பௌத்த மத வழக்கப்படி ‘ஷெர்பாங்’ பாடலைப் பாடி, நடனமாடி தலாய் லாமாவுக்குச் சிறப்பு வரவேற்பளித்தனர்.
சிக்கிம் பயணத்தின்போது, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் “போதிசத்துவர்களின் முப்பத்தி ஏழு நடைமுறைகள்” பற்றி தலாய் லாமா போதனை வழங்க உள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இதனிடையே, தலாய் லாமாவிடம் ஆசி பெறும் வகையில் பல்ஜோர் ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஏறக்குறைய 40,000 பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளதாக காங்டாக் காவல் ஆய்வாளர் டென்சிங் லோடன் லெப்சா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தலாய் லாமாவை சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங் வரவேற்றுப் பேசினார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக ஊடகத்தில் முதல்வர் பிரேம் சிங் வெளியிட்டுள்ள பதிவில், “சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் உள்ள லிபிங் ஹெலிபேடில் 14வது தலாய் லாமாவுக்கு எனது அன்பான வரவேற்பை அளித்து, மரியாதை செலுத்தியது பெரும் பாக்கியம்.
“அவரது புனிதத்தன்மை நமது மாநிலத்திற்கு அமைதியைக் கொண்டுவரும். அவருடைய ஆழ்ந்த போதனைகளும் முன்மாதிரியான வழிகாட்டுதல்களும் நம் இதயத்தையும் மனதையும் வளப்படுத்தும். ஆசீர்வதிக்கப்பட்ட சிக்கிம் பூமிக்கு அவரை வரவேற்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
87 வயதான தலாய் லாமா இந்தியா மற்றும் சீன எல்லையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால்ஜோர் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை போதனை செய்ய உள்ளார்.