ஹைதராபாத்: இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் நாள்தோறும் சராசரியாக 10 குழந்தைகள் வரை மாயமாவதாக தேசிய குற்றப் பதிவு காப்பகத்தில் 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவித்துள்ளது.
2022ல் காணாமல்போன 391 சிறுமிகள் உட்பட 654 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளனர்.
ஆண்டுதோறும் காணாமல்போகும் குழந்தைகளில் 4,000 குழந்தைகள் கிடைப்பதே இல்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
2022ல் மட்டும் 3,443 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். இதுவரை காணாமல்போன குழந்தைகளில் 4,097 பேர் கிடைக்கவில்லை.
மீட்கப்பட்ட குழந்தைகளின் விகிதம் 2022ஆம் ஆண்டு 87 விழுக்காடாக உள்ளது.
தெலுங்கானாவில் ஒவ்வொரு 10,000 குடும்பத்தில் ஒரு குழந்தை காணாமல் போவதாகவும், கடந்த 2020 - 2022ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 10,000 குழந்தைகள் காணாமல்போயிருப்பதாகவும் அறிக்கை கூறியுள்ளது.
ஒரு குழந்தை காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கிடைக்கப் பெற்றதும் உடனடியாக, குழந்தையின் புகைப்படத்தோடு, தேடப்படும் நபர் என்ற தகவலோடு அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்படும்.
அனைத்து வகைகளிலும் தேடுதல் பணி நடைபெறும். நான்கு மாதங்களில் காணாமல் போனவர் கிடைக்கப்பெறவில்லை என்றால், அது மனிதக் கடத்தல் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அவர்கள் விசாரணை நடத்துவது நடைமுறையாக இருப்பதாக தெலுங்கானா மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மகளிர், குழந்தைகள், முதியோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்திருப்பதை 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளிப்படுத்துகிறது.
இந்த அறிக்கையானது தேசிய அளவில் நடக்கும் குற்றங்களின் துல்லியமான கணக்கெடுப்பு இல்லை என்றும் ஆவணக் காப்பகம் கூறுகிறது. பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் புள்ளிவிவரங்களைத் தவிர, மற்ற நிகழ்வுகள் கணக்கெடுக்கப்படுவதில்லை என்பதையும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.