புதுடெல்லி: மக்களின் மேம்பாட்டால் மட்டுமே ஒரு நாடு வளர்ச்சி அடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆக விரைவில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான வழிகளைக் கண்டறிவது குறித்து ஆசிரியர்களும் பல்கலைக்கழகங்களும் சிந்திக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
‘வளர்ச்சியடைந்த இந்தியா-2047’ என்ற தலைப்பில் நடைபெற்ற பயிலரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், வளர்ச்சியடைந்த இந்தியாவின் 2047ஆம் ஆண்டுக்கான இலக்கை அடைவதில் நாட்டின் இளைஞர்களை வழிநடத்தும் பொறுப்பை வகிக்கும் அனைவரின் பங்களிப்பையும் பாராட்டுவதாக அவர் கூறினார்.
“ஒரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அதிவேக முன்னேற்றங்களை அடையும் ஒரு காலகட்டத்தை வரலாறு வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த அமிர்தகாலம் தொடர்கிறது.
“இந்திய வரலாற்றில் நாடு ஒரு பெரிய பாய்ச்சலை மேற்கொள்ளவிருக்கிறது. இது அதற்கான காலம். இதன் ஒவ்வொரு தருணத்தையும் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்,” என்றார் பிரதமர் மோடி.
ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு தனிநபரும் ஒவ்வொரு முயற்சியும் செயலும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், வளர்ந்த நாடாக மாறுவதற்கு குறிப்பிட்ட துறைகளை அடையாளம் காண வேண்டும் என்றார்.
இளையர்கள் கைப்பேசிகளுக்கு அப்பால் உலகை ஆராய்வதற்கான வழிகளைப் பரிந்துரைப்பது பற்றி கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற லட்சியத்துக்காக நாம் 24 மணி நேரமும் உழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

