லக்னோ: மருத்துவக் கல்லூரிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் வைத்து இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநில தலைநகர் லக்னோவில் உள்ளது கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம்.
அண்மையில் இங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார் இளம் பெண் ஒருவர். அப்போது மருத்துவமனைக்கு அருகே தேநீர் கடை நடத்தி வரும் சத்யன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தேநீர் கடைக்கு வந்த அந்த இளம் பெண்ணிடம் தனது கைப்பேசியை மின்னூட்டம் செய்து தருமாறு கேட்டுள்ளார் சத்யன்.
இதற்காக மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் வரை வருமாறு அழைத்துள்ளார். அவரை நம்பிச் சென்ற இளம் பெண்ணை காருக்கு அருகே காத்திருந்த இரண்டு பேர் திடீரென வளைத்துப் பிடித்து காருக்குள் தள்ளி விட்டனர்.
இதையடுத்து மூவரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகத் தெரிகிறது.
பின்னர் அந்த இளம் பெண்ணைச் சாலையில் தள்ளிவிட்டு மூவரும் காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள லக்னோ காவல்துறை மூன்று பேரையும் கைது செய்துள்ளது.

