தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

10 மாதத்தில் 3,917 கிலோகிராம் கடத்தல் தங்கம் பிடிபட்டது

2 mins read
ac4d8b47-c4d5-4319-8e6f-106472173a31
படம்: - பிக்சாபே

புதுடெல்லி: “ஜனவரி மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையில் 4,798 தங்கக் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 3,917.52 கிலோவாகும். இது முன்னெப்போதும் இல்லாத அளவாகும்,” என்று இந்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அன்று கேள்வி நேரத்தின்போது நாட்டில் அதிகரித்து வரும் தங்கக் கடத்தல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது அந்த தகவலை வெளியிட்டார் பங்கஜ் சவுத்ரி.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 3,982 தங்கக் கடத்தல் வழக்குகள் பதிவான நிலையில் 3,502.16 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

கடத்தலைத் தடுக்க, சுங்கத் துறை அமைப்புகளும், வருவாய் புலனாய்வு அமைப்புகளும் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருவதாக பங்கஜ் சவுத்ரி கூறினார்.

இந்நிலையில் துபாயில் இருந்து பெங்களூரு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ரூ. 55 லட்சம் மதிப்புள்ள 907 கிராம் தங்கத்தை உருக்கிய நிலையில் கடத்தி வந்த 24 வயது ஆடவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.

விமான நுழைவு வாயில் வழியாக வெளியே வந்தபோது அந்த ஆடவர் வழக்கத்திற்கு மாறாக சந்தேகப்படும் வகையில் நடந்து கொண்டால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர் அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். இடுப்புப் பகுதியில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும் அவரது பெட்டிகளில் இருந்த உள்ளாடைகளில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஆடவர் மீது கடத்தல் மற்றும் சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

குறிப்புச் சொற்கள்