இந்திய நாடாளுமன்றத்திற்குள் புகைவீச்சு

இந்திய நாடாளுமன்றத்திற்குள் புகைவீச்சு

2 mins read
1f757ea5-d462-4c01-9ea6-f779eb8cebf7
புகைவீச்சால் நாடாளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

இந்தியாவின் நாடாளுமன்ற மக்களவையில் இருவர் புகையை வீசிக் கொண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சில எம்பிக்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர்.

2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்று அது முறியடிக்கப்பட்ட 22வது வருட நினைவுநாளான புதன்கிழமை அன்று இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்தியாவில் தற்போது நாடளுமன்ற குளிர்காலத் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை மதியம் மக்களவையில் பார்வையாளர் அரங்கில் இருந்த இரண்டு பேர், மேலேயிருந்து எம்பிக்கள் அமர்ந்திருந்த இடத்தில் குதித்தனர்.

இதனால் அச்சமடைந்த சில எம்பிக்கள் அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். இருவர் கைகளிலும் புகை கக்கும் கலன்கள் இருந்தன.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம், “புகை மஞ்சள் நிறத்தில் இருந்தது,” என்று கூறியுள்ளார்.

ஒருவன், சபாநாயகரை நோக்கி ஓட முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இருவரும் ‘சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என்று இந்தியில் கத்திக்கொண்டே ஓடியதாக த இண்டியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.

சிஎன்என் நியூஸ்18 வெளியிட்ட காணொளியில் இருவரும் கறுப்பு சட்டை அணிந்திருந்தைக் காண முடிந்தது.

இந்தப் பதற்றமான சூழ்நிலையிலும் சில எம்பிக்கள், பாதுகாவலர்களின் உதவியுடன் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

இதற்கிடையே நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் புகையை வீசிக் கொண்டு ஓடினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தின்போது பிரதமர் மோடி அவையில் இல்லை.

அவை நடவடிக்கையின்போது அவைத் தலைவராக பாஜக எம்.பி. ராஜேந்திர அகர்வால் செயல்பட்டார்.

“முதல் நபர் இறங்கி ஓடியபோது யாரோ தவறி விழுந்ததாகக் கருதப்பட்டது. இரண்டாவதாக ஒருவர் வந்ததும் நாங்கள் அனைவரும் எச்சரிக்கையானோம்,” என்றார்.

“ஒரு நபர் தனது காலணியை கழற்ற முற்பட்டதுபோல் தெரிந்தது. அதிலிருந்து எதையோ எடுத்தார். புகை கிளம்பியது. சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சம்பவத்தின்போது தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைந்து வந்துவிட்டார்,” என்று திரு அகர்வால் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அவையில் புகுந்த இருவரில் ஒருவரிடம் மைசூர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரைச் சீட்டு இருந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்