இந்தியாவில் கொவிட்-19 கொள்ளைநோய் மெதுவாகப் பரவி வருகிறது. நாட்டை சில காலம் ஆட்டிப் படைத்த அந்த நோய், மீண்டும் தலைதூக்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
புதிதாக 237 பேருக்கு கொவிட்-19 தொற்று பரவியதாக இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்தது. இவர்களுடன் சேர்த்து தற்போது அந்தத் தொற்றுக்காக சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 1,185க்கு அதிகரித்துள்ளதாகவும் அது கூறியது.
ஈராண்டுகளுக்கு முன்னர் பரவத் தொடங்கிய கொவிட்-19 கொள்ளைநோய் தற்போது வரை இந்தியாவில் 4.50 கோடி மக்களைப் பாதித்ததாக அரசுத்தரப்பு தகவல் தெரிவிக்கிறது. அவர்களில் 4.40 கோடிப் பேர் அந்த நோயிலிருந்து மீண்டுவிட்டனர்.
இப்போதைய நிலவரப்படி கேரள மாநிலத்தில்தான் அதிகத் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. நாடு முழுவதும் பதிவான தொற்று எண்ணிக்கையில் 90 விழுக்காடு அந்த மாநிலத்தில் பதிவானதாகத் தெரிய வந்துள்ளது.
நவம்பர் மாதம் கேரளாவில் 479 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாள்களில் மட்டும் 825 பேர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, டிசம்பர் 7ஆம் தேதி மட்டும் 157 பேருக்கு அங்கு கொவிட்-19 பரவியது.
அண்மைய மாதங்களில் இந்திய அளவில் ஒரே நாளில் ஒரு மாநிலத்தில் அதிகத் தொற்றுச் சம்பவங்கள் பதிவானது அந்த நாளில்தான்.
நவம்பர் மாதம் தொற்று காரணமாக கேரளாவில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த மாதத்தில் இதுவரை இருவர் மாண்டுவிட்டனர்.
இருப்பினும் தொற்றுநோய் பாதிப்பின் தீவிரம் குறைவான நிலையிலேயே இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.