நீதிபதிக்கே பாலியல் துன்புறுத்தல்: நீதி கிடைக்காததால் உயிரைத் துறக்க விருப்பம்

1 mins read
d6ef1491-0023-4f6f-91be-ea2aae960730
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து புகார் அளித்தும் பலனில்லை என்று பெண் நீதிபதி வேதனை தெரிவித்து உள்ளார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

லக்னோ: பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் உயிரைப் போக்கிக்கொள்ள அனுமதிக்குமாறும் இளம் பெண் நீதிபதி ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி உள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி என்னும் இடத்தில் நீதிபதியாக இருந்தபோது சக மாவட்ட நீதிபதி ஒருவரால் தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

அதன் காரணமாக தாம் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அந்தத் துன்புறுத்தல் தொடர்பான விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றும் அந்தப் பெண் நீதிபதி வேதனை தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நிர்வாக நீதிபதியிடம் புகார் அளித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நான் நடைபிணமாக மாற்றப்பட்டேன்.

“உயிரற்ற எனது உடலைச் சுமந்து செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எனது வாழ்க்கையை கண்ணியமான முறையில் முடிக்க தயவுசெய்து என்னை அனுமதிக்கவும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், விசாரணை நிலவரம் பற்றி அலகாபாத் உயர் நீதிமன்ற நிர்வாகத்திடம் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிக்கை கேட்டுள்ளார்.

பெண் நீதிபதியின் கடிதம் வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

குறிப்புச் சொற்கள்