சபரிமலையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வது வழக்கமானதுதான்: பினராயி விஜயன்

2 mins read
5880e127-ee4a-44ed-ad27-45170628c47b
சபரிமலையில் பக்தர் கூட்டம். - கோப்புப்படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வது வழக்கமான நிகழ்வு தான் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் தற்போது அமைதியான சூழல் நிலவி வருகிறது என்றும் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.

சபரிமலை விஷயத்தில் அரசின் களப்பணிகள் மிகவும் கவனத்துடன் நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு சபரிமலை சீசனையொட்டி பாதுகாப்பு பணிக்கு 16,070 காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு 16,120 பேர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். பாதுகாப்பில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

“ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக ரூ.108 கோடியில் செங்கன்னூர், கழக் கூட்டம், சிரங்கரை, எருமேலி, நிலக்கல், மணியம் கோடு ஆகிய ஆறு இடங்களில் ஓய்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது,” என்றார் முதல்வர் பினராயி விஜயன்.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நாள்தோறும் சராசரியாக 62 ஆயிரம் பக்தர்கள் சபரிமலை தரிசனத்திற்கு வந்திருந்தனர் என்றும் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 88 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புல்மேடு, எருமேலி காட்டுப் பாதை வழியாக பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது என்றும் நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைந்த செயல் பாடுகள் சபரிமலையில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் கேரள முதல்வர் தெரிவித்தார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது கூட்டம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு குளறுபடியே இதற்கு காரணம் என கேரள எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் விளக்்கம் அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்