திருவனந்தபுரம்: தென்னிந்திய மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக கேரள அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது.
நிதி ஒதுக்கீடு செய்யும்போது தென் மாநிலங்களைப் புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாகவும் மத்திய அரசின் இத்தகைய போக்கு தென் மாநிலங்களை நிதி நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கொள்கைகளை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது என்றும் கேரளாவை இக்கட்டான சூழலில் தள்ளும் மத்திய அரசின் இந்தப் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது என்றும் கேரள முதல்வர் கூறியுள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிடக்கோரி மத்திய அரசிடம் கேரள அரசு பலமுறை வலியுறுத்தியது என்றும் மத்திய அரசோ பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்தாமல் தீவிரப்படுத்தியுள்ளது என்றும் கேரள அரசு தெரிவித்தது.
“மத்திய, மாநில தகராறுகளை தீர்ப்பதைக் கையாளும் அரசியலமைப்பின் 131வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திடம் உத்தரவு பெறுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டே இந்தச் சட்டப் போராட்டத்தை கேரளா தொடங்கியுள்ளது,” என்றார் முதல்வர் பினராயி விஜயன்.

