புதுடெல்லி: மக்களவை அத்துமீறலுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனக் குரல்கள் எழுப்பியதோடு அமளியில் ஈடுபட்டனர். அது தொடர்பாக காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 14 நாடாளுமன்ற உறுப்பினர்களை மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இடை நீக்கம் செய்தார்.
இந்நிலையில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவையில் நடந்த அத்துமீறல் பிரச்சினைக்கு பிரதமர் நரேந்திர மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறுகையில், “கேள்வி கேட்பது எங்களுடைய கடமை. எங்கள்மீது குற்றம் சாட்டி, நாங்கள் அரசியல் செய்கிறோம் என்று கூறினால், அந்த பிரச்சினையை அரசு திசை திருப்ப முயற்சி செய்கிறது. இது குறித்து பிரதமர் ஏதாவது தெரிவித்திருக்கிறாரா?” என்று வினவினார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

