நாடாளுமன்ற அத்துமீறல்: ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தீட்டப்பட்ட திட்டம்; மூளையாகச் செயல்பட்டவர் கைது

2 mins read
ae7b0569-290c-4bc4-a6bd-26da1983f48e
படம்: - இந்திய ஊடகம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைதாகி உள்ளனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு திட்டம் வகுத்த லலித் ஜா என்பவர் டெல்லி காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.

கோல்கத்தாவைச் சேர்ந்த ஆசிரியரான லலித் ஜா, தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தாமே சரணடைந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து, வண்ணப் புகை குப்பிகளை வீசி, அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய சாகர், மனோரஞ்சன் ஆகிய இருவரும் பிடிபட்டனர். நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகிய இரு பெண்கள் நாடாளுமன்ற அவைக்கு வெளியே இதேபோல் செயல்பட்டனர்.

நால்வரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. நால்வரையும் தன் வீட்டில் தங்கவைத்த காரணத்தால் குர்கான் பகுதியைச் சேர்ந்த விஷால் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நால்வரில் ஒருவரான அமோல் ஷிண்டே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பியுள்ளார். 25 வயதான இவர், அன்றாடக் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றி வந்ததாகவும் மேற்படிப்புக்காக அவர் கேட்ட நான்காயிரம் ரூபாயை தங்களால் தர இயலாமல் போய்விட்டது என்றும் அமோல் ஷிண்டேவின் பெற்றோர் கூறியுள்ளனர்.

நாடாளுமன்ற அத்துமீறலில் ஈடுபட்ட ஆறு பேரும் ‘பகத் சிங்’ ரசிகர் மன்றம் என்ற வலைத்தளம் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர்.

வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இவர்கள், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, மைசூரில் சந்தித்து ஆலோசித்துள்ளனர். பின்னர் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு மீண்டும் டெல்லியில் கூடி திட்டத்தைத் தீட்டி உள்ளனர்.

புதிய நாடாளுமன்றத்துக்கு வரும் பார்வையாளர்களின் காலணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்பதை தெரிந்துகொண்டு, அவற்றைப் பயன்படுத்தி வண்ணப்பொடிக் குப்பிகளை நாடாளுமன்ற வளாகத்துக்குள் கடத்தி உள்ளனர்.

கைதான அனைவரையும் ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறை திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக எட்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்