பயங்கரவாதத்துக்கு எதிரான முழு சகிப்பின்மைக்கு இந்தியா அழைப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான முழு சகிப்பின்மைக்கு இந்தியா அழைப்பு

2 mins read
1ddc587b-eecc-43fb-8630-2e3c5ac17c98
ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ். - படம்: இணையம்

புதுடெல்லி: பயங்கரவாத அமைப்புகளையும் அவற்றுக்கு ஆதரவாக இருப்போரையும் அறவே சகித்துக்கொள்ளக்கூடாது என்று ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு சிறிய வகை ஆயுதங்கள் விற்கப்படுவதை அவர் மேற்கோள் காட்டினார்.

பயங்கரவாத அமைப்புகளுக்குக் கூடுதல் சிறிய வகை ஆயுதங்கள் கிடைப்பதாகவும் சில நாடுகளின் ஆதரவு அவற்றுக்கு இருப்பதை இது நிரூபிப்பதாகவும் திருவாட்டி கம்போஜ் கூறினார்.

சிறிய வகை ஆயுதங்கள் குறித்து ஐநா பாதுகாப்பு மன்றத்தில் பொது விவாதத்தில் திருவாட்டி கம்போஜ் இந்தக் கருத்துகளை முன்வைத்தார்.

“பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா பல ஆண்டுகளாகப் போர் புரிந்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு சிறிய வகை ஆயுதங்களையும் தோட்டாக்களையும் விற்பதால் ஏற்படும் பேராபத்துகளைப் பற்றி இந்தியாவுக்கு நன்கு தெரியும்.

“எல்லை தாண்டிய பயங்கரவாதத்தாலும் வன்முறையாலும் இந்தியா பெரிதும் பாதிப்படைந்துள்ளது. பயங்கரவாத அமைப்புகள் இந்தச் சட்டவிரோதமான ஆயுதங்களை இந்தியாவுக்கும் கடத்திக் கொண்டு வந்தன. தற்போது ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி ஆயுதங்கள் இந்தியாவுக்குள் கொண்டு வரப்படுகின்றன,” என்றார் திருவாட்டி கம்போஜ்.

நாடுகளின் ஆதரவின்றி பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள் கிடைக்க முடியாது என்று திருவாட்டி கம்போஜ் தெரிவித்தார்.

எனவே, பயங்கரவாத அமைப்புகளையும் அவற்றை ஆதரிப்போரையும் சகித்துக்கொள்ளக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

ஆயுதங்கள் கடத்தப்படும் பாதைகளை அடையாளம் காண அனைத்துலக ஒத்துழைப்பு அவசியம் என்று திருவாட்டி கம்போஜ் கூறினார்.

அப்போதுதான் பயங்கரவாதிகளிடம் அத்தகைய ஆயுதங்கள் சென்றடைவதைத் தடுக்க முடியும் என்றார் அவர்.

கடத்தப்படும் ஆயுதங்களைக் கண்டுபிடிக்கும் தேசிய, உலகளாவிய முயற்சிகள் தீவிரப்படுத்தப்படுவதை இந்தியா ஆதரிப்பதாகவும் திருவாட்டி கம்போஜ் தெரிவித்தார்.

தேசிய சட்ட நடவடிக்கை மற்றும் அமலாக்கம், தகவல் பகிர்வு, ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இந்தியா ஆதரவு வழங்குகிறது என்று அவர் கூறினார்.

ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதில் இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் சிறிய வகை ஆயுதங்களும் அடங்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்