புதுடெல்லி: இந்திய நாடாளுமன்ற அத்துமீறலைத் திட்டமிட்டு நடத்தியதாகக் கூறப்படும் லலித் ஜா, ஏழு நாள்கள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை 15 நாள்கள் விசாரணைக் காவலில் வைக்க வேண்டும் என்று இந்தியக் காவல்துறை நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
லிலத் ஜா, இந்திய நேரப்படி டிசம்பர் 14ஆம் இரவு டெல்லி காவல்துறையிடம் சரணடைந்தார்.
இவர் பீகாரைச் சேர்ந்தவர் என்றும் கோல்கத்தாவில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் என்றும் காவல்துறை கூறியது.
லலித் ஜா மிகவும் அமைதியானவர் என்று அவரது அண்டைவீட்டாரும் அவரைத் தெரிந்தவர்களும் தெரிவித்தனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கை தமது முன்மாதிரியாக லலித் ஜா கருதுவதாக காவல்துறை கூறியது.
இந்திய நாடாளுமன்றத்துக்கு வெளியே நடத்தப்பட்ட புகை வீசப்பட்ட சம்பவத்தை லலித் ஜா காணொளி எடுத்து அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றின் நிறுவனரான நிலாக்ஷா ஐச் என்பவரிடம் காணொளிப் பதிவுகளை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
அந்தக் காணொளிகள் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

