அரபிக் கடலில் கடத்தப்பட்ட கப்பல்; துரித நடவடிக்கை எடுத்த இந்தியக் கடற்படை

அரபிக் கடலில் கடத்தப்பட்ட கப்பல்; துரித நடவடிக்கை எடுத்த இந்தியக் கடற்படை

படம்: தமிழ் முரசு

16 Dec 2023 - 7:43 pm

1 mins read

புதுடெல்லி: மால்டாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் ஒன்று அரபிக் கடலில் கடத்தப்பட்டது. அந்தக் கப்பலிலிருந்து உதவி கேட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதை அடுத்து, உடனடி நடவடிக்கையில் இந்தியக் கடற்படை இறங்கியது.

சம்பந்தப்பட்ட கப்பலில் 18 சிப்பந்திகள் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

அக்கப்பல் சில நாள்களுக்கு முன்பு நடுக்கடலில் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கப்பல் கடத்தப்பட்டுள்ளதாகவும் ஆறு கடற்கொள்ளையர்கள் கப்பலில் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது என்று இந்தியக் கடற்படை கூறியது.

தகவல் கிடைத்ததும் நேரம் தாழ்த்தாமல் இந்தியக் கடற்படை துரித நடவடிக்கையில் இறங்கியது.

முதலில் கண்காணிப்புக் குழு ஒன்றை அது அனுப்பியது. அத்துடன் தனது போர்க்கப்பல் ஒன்றைக் கடத்தப்பட்ட கப்பல் இருந்த கடற்பகுதிக்கு கடற்படை அனுப்பி வைத்தது.

கடத்தப்பட்ட எம்வி ருவன் எனும் பெயர் கொண்ட கப்பலைத் தேடிக் கண்டுபிடிக்க கடற்கொள்ளையர்களுக்கு எதிராக கடலில் சுற்றுக்காவல் மேற்கொள்ளும் போர்க்கப்பல் விரைந்தது.

இந்நிலையில், கடத்தப்பட்ட கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலையில் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று அந்தக் கப்பல் அருகில் பறந்து சென்றது.

கடத்தப்பட்ட கப்பலை இந்திய கடற்படை அதிகாரிகள் வைத்த கண் வாங்காமல் கண்காணித்தனர்.

இதையடுத்து, இந்திய நேரப்படி டிசம்பர் 16 தேதி அதிகாலை நேரத்தில் கடத்தப்பட்ட கப்பலை இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் வெற்றிகரமாக வழிமறித்ததாக அறிக்கை வெளியிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
கடற்படை