தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் கவலை தரும் ‘டீப்ஃபேக்’ காணொளிகள்

2 mins read
e3fce031-bd65-468c-b628-458b43f68899
செயற்கை நுண்ணறிவைக் கொண்டு பிரபல இந்திய தொலைக்காட்சிப் படைப்பாளர்கள் இடம்பெற்ற விளம்பரக் காணொளி உருவாக்கப்பட்டிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: பூம்

புதுடெல்லி: ரவீஷ் குமார், அர்னாப் கோஸ்வாமி, சுதிர் செளத்ரி, அஞ்ஜனா ஓம் க‌ஷ்யப் போன்ற இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி படைப்பாளர்களின் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘ டீப்ஃபேக்’ வடிவங்கள் ஒரு காணொளியில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

நீரிழிவு நோய் மருந்துக்கான இணைய விளம்பரம் என்று நம்பப்படும் அந்த விளம்பரக் காணொளியில் அவர்களின் ‘டீப்ஃபேக்’ வடிவங்கள் இடம்பெற்றன.

காணொளிகளில் செயற்கை நுண்ணறிவால் சம்பந்தப்பட்ட நபரின் முகத்தை வேறொருவரின் உடலில் பொருத்துவதன் மூலம் ‘டீப்ஃபேக்’ வடிவம் உருவாக்கப்படுகிறது. அந்நபரே அதில் இருப்பது போல் காட்சிகள் தத்ரூபமாக இருக்கும்.

திரு குமார், திரு அர்னாப், திரு செளத்ரி, திருவாட்டி அஞ்ஜனா ஆகியோரின் ‘டீப்ஃபேக்’ வடிவங்களைக் கொண்ட காணொளி இணையத்தில் பலரால் பகிரப்பட்டது. இணையத்தில் இருக்கும் அவர்களின் காணொளிகளைக் கொண்டு அந்த விளம்பரக் காணொளி உருவாக்கப்பட்டதாக தகவல்களை சரிபார்க்கும் இந்திய நிறுவனமான பூம் தெரிவித்தது.

செயற்கை நுண்ணறிவைக் கொண்டு அந்தக் காணொளி உருவாக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதைச் சுட்டிய பூம், அவர்களைப் போலவே பேசக்கூடியவர்களின் குரல் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என்றும் கூறியது.

இந்தி மொழியில் குரல் பதிவுசெய்யப்பட்டது. ‘டீப்ஃபேக்’ செயற்கை நுண்ணறிவு முறை இன்னும் இந்தி மொழியில் சரளமாகவில்லை.

சம்பந்தப்பட்ட ‘டீப்ஃபேக்’ காணொளியுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று திரு குமார் டிசம்பர் மாதம் ஏழாம் தேதியன்று எக்ஸ் சமூக ஊடகத்தில் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாகப் பல இந்தியப் பிரபலங்கள் இதுபோன்ற ‘டீப்ஃபேக்’ பதிவுகளுக்கு இரையாகியிருக்கின்றனர்.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ரட்டன் டாட்டாவின் படம் ஒன்று செயற்கை நுண்ணறிவின் மூலம் முதலீட்டு விளம்பரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை விரைவில் அதிகரித்து வருகிறது. அதேவேளை அந்நாட்டில் இணைய நடத்தை தொடர்பான விழிப்புணர்வு அதிகம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இப்பிரச்சினை அந்நாட்டுக்குக் கவலை தரும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இணையத்தில் இடம்பெறும் பொய்த்தகவல்கள், இணையத்தில் இடம்பெறும் போலித் தகவல்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் நிதி மோசடிச் செயல்கள் போன்றவை அதிகரித்துள்ளன. அதோடு, ‘டீப்ஃபேக்’ செயற்கை நுண்ணறிவு முறை எதிர்வரும் இந்தியப் பொதுத் தேர்தலுக்கு இடையூறாக அமையலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

‘டீப்ஃபேக்’ பதிவுகளைக் கையாள தெளிவான, ஆக்ககரமான திட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாக இந்திய அரசாங்கம் நவம்பர் மாதம் அறிவித்தது. பிரபல நடிகை ரா‌ஷ்மிகா மந்தனாவின் ‘டீப்ஃபேக்’ வடிவம் இடம்பெற்ற காணொளியால் எழுந்த சர்ச்சை இந்திய அரசாங்கம் அத்தகைய அறிவிப்பை மேற்கொண்டதற்கான காரணங்களில் ஒன்று.

உலகளவில் தற்போது ‘டீப்ஃபேக்’ பதிவுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்