உணவகத்திற்குள் லாரி புகுந்து விபத்து: 4 பேர் பலி

1 mins read
2f2a1561-2fa0-4e48-b848-1d2715ed3a27
உத்தரப் பிரதேசத்தில் சாலையோர உணவகத்திற்குள் சென்ற லாரி பாரந்தூக்கியின் உதவியால் அப்புறப்படுத்தப் படுகிறது. - படம்: இண்டியா டாட் காம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் இடாவாஹ் மாவட்டத்தைச் சேர்ந்த இஹ்டில் என்னும் சிற்றூரில் தேசிய நெடுஞ்சாலை அருகே ஓர் உணவகம் அமைந்துள்ளது. அவ்வழியே பயணம் செல்வோர் வாகனங்களை அருகே நிறுத்திவிட்டு அங்கு வந்து சாப்பிட்டுச் செல்வர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் அங்கு சில வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சாலையோர உணவகத்திற்குள் புகுந்தது.

இந்த விபத்தில் உணவகத்தின் உரிமையாளர் குல்தீப் குமார், வாடிக்கையாளர்கள் மூன்று பேர் என மொத்தம் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று இடவாஹ் மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் வெர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் லாரி ஓட்டுநரைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் பலியானவர்களை அடையாளம் காணும் பணியையும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே உ.பி.யில் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. அதற்கு போக்குவரத்து விதிமுறைகளை ஓட்டுநர்கள் சரிவரக் கடைப்பிடிக்காததே காரணம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்து