புதுடெல்லி: ஓமான் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மூன்று நாள் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை இந்தியத் தலைநகர் டெல்லிக்கு வந்துள்ளார். அவரை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் வரவேற்றார்.
வெள்ளிக்கிழமை காலை டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த ஓமான் நாட்டு மன்னர் ஹைதம் பின் தாரிக்கை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றனர்.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் மோடியும் ஓமான் நாட்டு மன்னர் ஹைதம் பின் தாரிக்கும் கலந்துரையாடினர்.
26 ஆண்டுகளுக்கு பின்னர் ஓமன் சுல்தான், ஒருவர் அரசு முறை பயணமாக இந்தியா வந்தது, ஓமன் - இந்தியா இடையேயான உறவில் வரலாற்று சிறப்புமிக்கது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இருநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை விரிவுபடுத்துவது தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசித்ததாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரிந்தம் பக்சி, எக்ஸ் தளப் பதிவில், “இரு நாட்டுத் தலைவர்களும், அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம். கலாசாரம் உள்ளிட்ட தளங்களில் ஓமான் - இந்தியா ஆகிய நாடுகளின் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினர். உள்நாட்டு மற்றும் அனைத்துலகப் பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் பேசினர்,” என்று பதிவிட்டுள்ளார்.
காசா மீது இஸ்ரேல் இரு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், இவ்விவகாரம் குறித்தும் அவர்கள் பேசியதாகக் கூறப்படுகிறது.
மேலும் மின்னியல் கட்டமைப்பு, விண்வெளி ஆராய்ச்சி. பசுமை எரிஆற்றல் கட்டமைப்பு. சுகாதாரம். சுற்றுலா, உணவுப் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் கலந்து பேசியதாகவும் சுகாதாரம், சுற்றுலா, பசுமை ஆற்றல், விண்வெளி துறை, மின்னிலக்க பணப் பரிவர்த்தனை ஆகிய 10 முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.