சண்டிகார்: கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு போலி ‘என்கவுண்டர்’ மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாக புகார் எழுப்பிய பெண்ணுக்கு இப்போது நீதி கிடைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தல்பீர் கவுரின் கணவர் சுக்பால் சிங் கடந்த 1994ஆம் ஆண்டு பயங்கரவாதி என குற்றம் சாட்டப்பட்டு காவல்துறையினரால் கொல்லப்பட்டார்.
அவர் பண்டாலா என்ற பெயரில் பயங்கரவாதச் செயல்களை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
தமது கணவர் பயங்கரவாதி அல்ல என்றும் காவல்துறையினர் போலி வழக்குப் பதிவு செய்து கணவரைக் கொன்றுவிட்டனர் என்றும் தல்பீர் கவுர் புகார் எழுப்பினார்.
பின்னர் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடுத்து சட்ட ரீதியாகவும் போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில், 1998ஆம் ஆண்டு பண்டாலா காவல்துறையிடம் சிக்கினார். இதன் மூலம் போலி புகாரைப் பதிவு செய்து சுக்பால் சிங் கொல்லப்பட்டது உறுதியானது.
இதையடுத்து, நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் சுக்பால் சிங் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கணவர் கொல்லப்பட்டபோது கர்ப்பிணியாக இருந்த தல்பீர் கவுருக்கு 19 வயது. தற்போது 48 வயதை எட்டியுள்ள அவர், தன் மகனுடன் வசித்து வருகிறார்.


