ராமர் கோயில் பொருளியல் பலன் எட்டாக்கனி: ஒருசில உள்ளூர்வாசிகள் புலம்பல்

ராமர் கோயில் பொருளியல் பலன் எட்டாக்கனி: ஒருசில உள்ளூர்வாசிகள் புலம்பல்

படம்: ராய்ட்டர்ஸ்

18 Dec 2023 - 2:25 pm

2 mins read

அயோத்தி: அயோத்தி நகரில் $6 பில்லியன் மதிப்பிலான ராமர் கோயில் கட்டுமானம் நிறைவு பெறவிருக்கிறது.

இக்கோயில் திறக்கப்பட்ட பிறகு, பொருளியல் வளர்ச்சிகாணும் என்று கருதப்பட்டாலும் உள்ளூரில் வசிக்கும் ஏழைகளும் முஸ்லிம்களும் தாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை என்கின்றனர்.

ராமர் கோயிலின் முதற்பகுதி 2024 ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. அதன் பிறகு, மாதாமாதம் ஏறக்குறைய 4.5 மில்லியன் சுற்றுப்பயணிகள் அயோத்திக்கு வந்துசெல்வர் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அயோத்தியின் மக்கள்தொகையைவிட (3 மில்லியன்) அது அதிகம்.

அயோத்தியில் தற்போது ராமர் கோயில் கட்டப்படும் இடத்தில் முன்பு பாபர் பள்ளிவாசல் அமைந்திருந்தது. ஏற்கெனவே இந்துக் கோயில் இருந்த இடத்தில் அந்த பள்ளிவாசல் கட்டப்பட்டதாகக் கூறி 1992ஆம் ஆண்டு, பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவரம் வெடித்தது. அந்தக் கலவரங்களில் ஏறக்குறைய 2,000 பேர் உயிரிழந்தனர்.

பல்லாண்டு கால சட்டப் போராட்டத்திற்குப்பின் இந்திய உச்ச நீதிமன்றம் 2019ல் அந்த இடத்தில் இந்துக் கோயில் கட்டப்படலாம் என்று தீர்ப்பளித்தது.

அயோத்தி நகர் அமைந்திருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆட்சியில் உள்ளது.

ராமர் கோயில் கட்டுமானத்தை தேசிய இயக்கமாக முன்னெடுத்துச் செல்லும் அக்கட்சி, அயோத்தியை உருமாற்றும் பெருந்திட்டத்தை மேற்கொண்டுவருகிறது.

புதிய அனைத்துலக விமான நிலையம், பூங்காக்கள், சாலைகள், பாலங்கள் உட்பட பல்வேறு வசதிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய சில வர்த்தகர்களும் குடியிருப்பாளர்களும் ராமர் கோயிலால் அயோத்திக்கு புதிய முதலீடுகளும் வளர்ச்சியும் பெரு மளவு கிடைத்து வருவதாகக் கூறினர். இருப்பினும் அதனால் தங்களது வாழ்க்கையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்று உள்ளூர் மக்களில் சிலர் தெரிவித்தனர்.

மறுமேம்பாட்டுப் பணிகளுக்காக குடியிருப்பாளர்கள் சிலரின் கட்டடங்கள் இடிக்கப்பட்டன. தங்களுக்குக் குறைவான இழப்பீட்டுத் தொகையே தரப்பட்டதாகவும் தற்போது நிலத்தின் விலை வெகுவாக உயர்ந்திருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

அயோத்தியில் ஏறக்குறைய 350,000 முஸ்லிம்கள் வசிக்கின்றனர். பொருளியல் வளர்ச்சியால் தங்களுக்கு நன்மை ஏதுமில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

முஸ்லிம்களுக்கு நன்மை இல்லை என்று கூறப்படுவதை பாஜக பேச்சாளர் ராகேஷ் திரிபாதி நிராகரித்தார்.

“சாலைகள் விரிவுபடுத்தப்பட்டால் முஸ்லிம்களும் அவற்றைப் பயன்படுத்துவர். மின்சாரம் வழங்கப்படும்போது முஸ்லிம்களுக்கும் அதனால் பலனுண்டு,” என்றாரவர்.

குறிப்புச் சொற்கள்