இந்தியாவில் 1,215 ரயில் நிலைய மேற்கூரைகளில் சூரியஒளி மின் உற்பத்தி

1 mins read
139acf29-f201-4c61-9b9e-a0708cd1fefb
இந்தியாவில் ஏறக்குறைய 1,215 ரயில் நிலைய மேற்கூரைகளில் சூரிய ஒளி மின்தகடுகள் பொருத்தப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: இந்தியா முழுவதும் ஏறக்குறைய 1,215 ரயில் நிலைய மேற்கூரைகளில் சூரிய ஒளி மின்தகடுகள் பொருத்தப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்கும் வகையில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் தெற்கு ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது. ரயில் நிலையங்களின் மேற்கூரைகள், அலுவலகங்கள், பணிமனைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் சூரிய ஒளி மின்தகடுகள் பொருத்தப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

“தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உட்பட ஆறு கோட்டங்களில் ஆறு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களுக்குத் தேவையான மின்சாரம் இதன்வழி பூர்த்தி செய்யப்படுகிறது.

“நாடெங்கும் 1,215 ரயில் நிலைய மேற்கூரைகளில் சூரியஒளி மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. 2014ஆம் ஆண்டுவரை 150 ரயில் நிலையங்களில் மட்டுமே சூரிய ஒளி மின்சாரத் தகடுகள் நிறுவப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது,” என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டில் மட்டும் 5.07 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டு, 5.47 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.2.3 கோடி சேமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்