நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல்

2 mins read
0e54aa90-2685-4cd8-8af2-676de37e6b19
தாவூத் இப்ராஹிமுக்கு அவரது ஆள் ஒருவர் விஷம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

கராச்சி: இந்திய அரசாங்கத்தால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் உடல் நலம் பாதிக்கப்பட்டு பாகிஸ்தானில் உள்ள கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மர்ம நபர்கள் விஷம் கொடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தாவூத் இப்ராஹிம் சேர்க்கப்பட்ட மருத்துவமனையைச் சுற்றி பாகிஸ்தான் அரசாங்கம் பலத்த காவல் போட்டுள்ளது.

ஆனால் தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை இந்தியாவோ பாகிஸ்தானோ அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது ஆட்களில் ஒருவர் அவருக்கு விஷம் செலுத்தியதால் அவர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் நடைபெற்ற பல பயங்கரவாத செயல்களுக்கு இவர் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

1993ஆம் ஆண்டின் மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவம், 2008ஆம் ஆண்டின் மும்பை தாக்குதல், புனேயில் 2010ஆம் ஆண்டின் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல குற்றங்களில் இவருக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அமெரிக்காவும் இந்தியாவும் தாவூத் இப்ராஹிமை பயங்கரவாதியாக பிரகடனப்படுத்தி தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தன.

இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற தாவூத்திற்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துள்ளதாக இந்தியா பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் இதனை மறுத்து வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

2023 ஜனவரி மாதம் தாவூத் இப்ராஹிமின் சகோதரியான ஹசீனா பர்கரின் மகள் அலிஷா பர்கர், பாகிஸ்தானின் கராச்சி நகரில் அப்துல்லா காசி பாபா தர்காவிற்குப் பின்புறம் ரஹிம் ஃபாகி எனும் பகுதியில் தாவூத் வசிப்பதாக இந்திய தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்