தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஆன்மிகம் என்ற ஆணிவேரை அடிப்படையாகக் கொண்டது இந்தியா’

2 mins read
83a09565-5a92-4392-8f1f-d7b32cc727ca
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நினைவுப்பரிசு வழங்கினார். - படம்: ஊடகம்

வாரணாசி: பிற நாடுகளில் தேசம் என்பது அரசியல் புரிதலோடு அணுகப்பட்டது என்றும் இந்தியாவில் மட்டுமே தேசம் என்பது ஆன்மிகம் என்ற ஆணிவேரை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற புனிதர்கள்தான் ஒரு தேசமாக இந்தியாவை ஒருங்கிணைத்துள்ளனர் என்றும் இவர்கள்தான் தங்களின் யாத்திரையின்போது தேசத்தின் ஆன்மாவைத் தட்டி எழுப்பினர் என்றும் காசி தமிழ் சங்கமத்தின் 2ஆம் கட்ட நிகழ்வை வாரணாசியில் தொடங்கி வைத்துப் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

“தமிழகத்தின் ஆதின துறவி களும் கூட பல நூற்றாண்டு காலமாக காசி போன்ற சிவபதிகளுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். திருப்பனந்தாள் ஆதின கர்த்தர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் காசிவாசி என எழுதுகிறார்கள்.

“இதுதவிர தமிழ் ஆன்மிக நூல்களிலும் பாடல் பெற்ற தலமாக காசி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மரபுகள் நம்மை எப்போதும் ஒன்றிணைக்கின்றன. காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகள் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்கிற உணர்வுக்கு வலுசேர்க்கின்றன,” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அவரது உரை செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் மூலம் முதன் முதலில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மோடி பேசிய உரையை பார்வையாளர்கள் உடனுக்குடன் கேட்க முடிந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள நமோ படித் துறையில் காசி தமிழ் சங்கமம் விழாவைப் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி வரும் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் 10 இந்திய மொழிகள், 5 வெளிநாட்டு மொழிகள் என 15 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.

அத்துடன், பிரெய்லி முறையிலான திருக்குறள், சங்க இலக்கியம், இலக்கண நூல்களும் வெளியிடப்பட்டன.

வாரணாசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான தொடர்பினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை மத்திய கல்வித்துறை ஏற்று நடத்துகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 1,400 பேர் அரசு செலவில் கலந்து கொள்ள அடுத்தடுத்த கட்டங்களாக வர உள்ளனர்.

காசி-தமிழ்நாடு இடையிலான உறவு உணர்வு பூர்வமானது என்றும் தமிழக மக்களுக்கும் காசிக்கும் இடையிலான பிணைப்பு சிறப்பு வாய்ந்தது என்றும் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்