அரிசி விலையைக் குறைக்கும்படி வர்த்தகர்களுக்கு இந்திய அரசு உத்தரவு

2 mins read
1e727519-5123-489e-8d9d-5ad1295252f6
படம்: - பிக்சாபே

புதுடெல்லி: அரிசியின் சில்லறை விலையை உடனடியாகக் குறைக்கும்படி அரிசி விற்பனையாளர் சங்கங்களுக்கு இந்திய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (டிச. 19) உத்தரவிட்டுள்ளது.

ஆண்டு அடிப்படையில் அரிசி விலை 12% அதிகரிப்பது குறித்து இந்தியாவின் மத்திய வங்கி தகவலளித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு வெளியாகியிருக்கிறது.

முறையற்ற வகையில் லாபம் ஈட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு, பொது விநியோகத் துறைச் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா எச்சரித்தார்.

அரிசி தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் பிரதிநிதிகளுடன் புதுடெல்லியில் நடத்திய சந்திப்புக்குப் பிறகு பேசிய அவர், “ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காரிஃப் பருவத்தில் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. இந்திய உணவுக் கழகத்திடம் போதிய கையிருப்பு உள்ளது. அரிசி ஏற்றுமதிக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் உள்நாட்டில் அரிசி விலை உயர்வது ஏன் என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது,” என்றார்.

“உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலை மிதமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்,” என்று திரு சோப்ரா வலியுறுத்தினார்.

மொத்த விற்பனையாளர்களும் சில்லறை விற்பனையாளர்களும் ஈட்டும் லாபத்தின் அளவு மிகவும் அதிகரித்திருப்பதாக சில அறிக்கைகள் கூறுவதாக அரசாங்கம் தெரிவித்தது. அதனால், அதிகபட்ச சில்லறை விலைக்கும் அரிசியின் உண்மையான விலைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது.

எனவே, பயனீட்டாளர்களின் நலன் கருதி விலைக்கும் லாபத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும்படி வர்த்தகர்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டுச் சந்தையில் அரிசி தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் ஏற்கெனவே மேற்கொண்டுள்ளது.

பாசுமதி அரிசி, இரண்டு வகையான அரிசிக் குருணை, பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதிக்குக் கடந்த ஜூலை மாதம் அது தடை விதித்தது.

மேலும், பொதுச் சந்தையில் அரிசி விற்பனையையும் அரசாங்கம் தொடங்கியது. அதற்கென 25 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை அது ஒதுக்கியது. ஆனால் கடந்த ஆறு மாதங்களில் அதில் 1.19 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மட்டுமே விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் 2023 அக்டோபர் 5ல் அரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றும் தொழிலாளர்கள்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் 2023 அக்டோபர் 5ல் அரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றும் தொழிலாளர்கள். - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்