புதுடெல்லி: பாஜக தலைவர்கள் ஒற்றைக் கட்சி ஆட்சியை ஏற்படுத்த முயற்சி செய்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
“வெட்கக்கேடான பாதுகாப்பு குறைபாட்டிற்கு உயர் பொறுப்பில் இருப்பவர்களைத் தண்டிக்காமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்து பொறுப்பிலிருந்து தப்பி இருக்கிறார்கள்,” என்று கார்கே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நடந்த அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விளக்கம் கோரி அமளியில் ஈடுபட்டனர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள். அதற்காக 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதில், நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்புக் குறைபாடு குறித்து உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்டதற்காக 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விதிகளை மீறி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த 6 பேரும் பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு பரிந்துரை வழங்கிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீது இதுவரை எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை. என்ன மாதிரியான விசாரணை இது என்று கார்கே அந்தப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றப் பாதுகாப்புக் குறைபாட்டிற்கு மூத்த அதிகாரிகள் பொறுப்பேற்காதது ஏன்? அவர்கள்தான் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
ஒரு மாதத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்குத் திட்டமிட்டுள்ளனர். இது உளவுத்துறையின் தோல்வி. இதற்கு யார் பொறுப்பு என்று கார்கே தனது எக்ஸ் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனநாயகத்தின் புனிதத் தளத்திற்குள் காலணிகளில் புகைக் குப்பிகளை மறைத்து வைத்து பல கட்ட பாதுகாப்பையும் மீறி எப்படி உள்ளே வந்தார்கள்?
பிரதமரும், அவரது கட்சியும் ஒற்றைக் கட்சி ஆட்சியை நாட்டில் ஏற்படுத்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது இதில் தெரிகிறது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கம் மூலம் துல்லியமாக இதை செய்துள்ளார்கள் என்று கார்கே தனது பதிவில் கூறியுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

