புதுடெல்லி: அமெரிக்க மண்ணில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய இந்திய அதிகாரி சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் எந்தவொரு தகவல் கிடைத்தாலும் அதன் அடிப்படையில் தமது அரசாங்கம் விசாரணை நடத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
குர்பத்வந்த் சிங்கை கொலை செய்ய நடைபெற்ற முயற்சி தொடர்பான விவகாரத்தில் மோடி முதல்முறையாகப் பதில் தெரிவித்து உள்ளார்.
அந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களைத் தந்தால் இந்தியா அதுபற்றி விரிவாக ஆராயும் என்று தி ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
“நீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். இதுபோன்ற சிறிய சம்பவங்கள் உலகின் இரு பெரிய பொருளியல், ஜனநாயக நாடுகளின் உறவுகளை சீர்குலைத்துவிட முடியாது.
“இந்த உறவினை வலுபடுத்த இருநாடுகளிடமும் உறுதியான ஆதரவுகள் உள்ளன. இது முதிர்ச்சியான, நிலையான உறவு என்பதின் தெளிவான அறிகுறி” என்று மோடி கூறினார்
சீனாவின் அதிகார பலம் அதிகரித்து வருவதன் தொடர்பில் தங்களது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொள்ள இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கி வரும் நிலையில் மோடியின் கருத்து வெளியாகி உள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்ற குர்பத்வந்த் சிங்கை நியூயார்க்கில் கொலை செய்ய இந்திய அதிகாரியுடன் இணைந்து இந்திய நாட்டவரான நிகில் குப்தா என்பவர் முயன்றதாக அமெரிக்க அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர்.
இது குறித்து கவலை தெரிவித்த இந்தியா, இவ்விவகாரம் தொடர்பில் விசாரிக்க நவம்பர் 18ஆம் தேதி அமைக்கப்பட்ட குழு கண்டறியும் விவரங்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது.