மேற்கு வங்க மாநிலத்திற்கான நிதியை விடுவிக்குமாறு மம்தா கோரிக்கை

மேற்கு வங்க மாநிலத்திற்கான நிதியை விடுவிக்குமாறு மம்தா கோரிக்கை

2 mins read
7fefffc6-66c4-4414-949b-bab1dfa9c6da
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 4 நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இண்டியா கூட்டணியில் கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது மம்தா, மத்திய அரசு பிடித்துவைத்திருக்கும் மேற்குவங்க மாநிலத்திற்கான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டார்.

மேற்கு வங்கத்திற்குச் சேர வேண்டிய ரூ.1.16 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதுகுறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவருடன் திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன் சென்றிருந்தனர்.

முன்னதாக, மம்தா பானர்ஜி கூறுகையில், “கிராமப்புற சாலைத் திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், முழுச் செலவையும் மத்திய அரசு ஏற்காது.

இது மாநில, மத்திய அரசுகளால் கூட்டாக செயல்படுத்தப்படும் திட்டம். இதேபோல் சுகாதாரத்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

“அரசியலமைப்புச் சட்டப்படி மாநிலத்திற்கு உரிய நிதியை பிரதமர் விடுவிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். இது குறித்து மத்திய மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இடையே கூட்டுக் கூட்டங்கள் நடைபெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார், ” என்று முதல்வர் மம்தா மேலும் கூறினார்.

“மத்திய அரசு வசூலிக்கும் நிதியில் மாநில அரசுக்குச் சேர வேண்டிய பங்கும் உள்ளது. ஏனெனில் தற்போது ஜிஎஸ்டி என்ற ஒரே ஒரு வரி மட்டுமே உள்ளது,” என தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்