திரிணாமூல் எம்.பி கேலி செய்த விவகாரம்; பிரதமர் மோடி வேதனை

திரிணாமூல் எம்.பி கேலி செய்த விவகாரம்; பிரதமர் மோடி வேதனை

2 mins read
c6d9d17d-42d6-4113-abd5-77d1ffd1f2da
பிரதமர் மோடியுடன் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கரைப் போல பேசி நடித்து கேலி செய்திருந்தார் திரிணாமூல் எம்.பி கல்யாண் பானர்ஜி.

இது, வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தன்னிடம் தெரிவித்ததாக ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.

எம்.பி.க்கள் விதிகளுக்கு உட்பட்டு கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என நாட்டின் அதிபர் திரௌபதி முர்மு வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நடந்த விவகாரம் தொடர்பில் அமளியில் ஈடுபட்ட 141 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ‘இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் பேச்சை திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி கேலி செய்து நடித்துக் காட்டினார். இதை கேட்டு மற்ற எம்.பி.க்கள் சிரிக்கும் காட்சியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காணொளி எடுத்தார்.

அந்தக் காணொளி காங்கிரஸ் கட்சியின் இன்ஸ்டகிராமில் வெளியிடப்பட்டு பின்னர் அகற்றப்பட்டது.

இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்

“எம்.பி.க்கள் சிலர் நாடாளுமன்ற வளாகத்துக்குள் என்னைப் போல பேசி நடித்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி என்னிடம் தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினார். இதுபோன்ற அவமதிப்புகளை அவர் கடந்த 20 ஆண்டுளாகச் சந்தித்து வருவதாகவும், ஆனால் அரசியல் சாசன பதவியில் உள்ள துணை அதிபரை அவமதிப்பது துரதிருஷ்டம் என்றும் பிரதமர் மோடி கூறினார். ‘இது போன்ற சம்பவங்கள் எனது கடமையை தடுக்காது’ என்று பிரதமர் மோடியிடம் நான் தெரிவித்தேன்,” என்று தன்கர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே அதிபர் திரௌபதி முர்மு ‘எக்ஸ்’ பதிவில், ஜக்தீப் தன்கர் அவமதிப்பு செய்யப்பட்டது குறித்து அதிர்ச்சியடைந்ததாகவும் எம்.பி.க்கள் விதிகளுக்கு உட்பட்டு கண்ணியத்துடன் நடக்க வேண்டும், அதுதான் நாடாளுமன்ற பாரம்பரியம், அதையே எம்.பி.க்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
காங்கிரஸ்ராகுல் காந்தி