தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விலைவாசியைக் கட்டுப்படுத்த மோடி அரசாங்கம் மும்முரம்

1 mins read
9ed0d3af-1044-4007-acd6-1dc7fbf706ee
2024 மார்ச் வரை வெங்காய ஏற்றுமதிக்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. - படம்: இபிஏ

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியாவின் நரேந்திர மோடி அரசாங்கம் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் சவாலைச் சந்தித்து வருகிறது.

உணவு விலைகளைக் குறைக்கும் ஒரு முயற்சியாக வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தடை விதித்ததோடு பருப்பு வகைகளை தாராளமாக இறக்குமதி செய்யும் வகையில் அவற்றுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசாங்கம் நீக்கிவிட்டது.

விலைவாசிப் பிரச்சினை, மோடி மூன்றாம் முறை பிரதமர் ஆவதற்கு இடைஞ்சலாக இருக்கக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கைகளை பாஜக அரசாங்கம் எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

“அண்மைய மாதங்களாக பயறு, தானியங்களின் விலை ஏற்றம் கண்டதால் பணவீக்கம் ஈரிலக்கத்தில் தொடருகிறது.

“இந்நிலையில், காய்கறிகள் மற்றும் சர்க்கரையின் விலையும் ஏறியது கவலையை அதிகப்படுத்தி உள்ளது,” என்று கேர்எட்ஜ் எனப்படும் மதிப்பீட்டு நிறுவனத்தின் மூத்த பொருளியல் நிபுணர் சர்பர்தோ முகர்ஜி கூறினார்.

அதனால், பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் உணவு விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உணவுப் பொருள்களின் விலை உயர்ந்ததன் காரணமாக நவம்பர் மாதம் பணவீக்கம் 5.55 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. மூன்று மாதத்தில் இது ஆக அதிகம்.

மொத்த விற்பனைச் சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோ 50 ரூபாய்க்கு மேல் (80 சிங்கப்பூர் காசு) உயர்வதைத் தடுக்க அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் 40 விழுக்காடு ஏற்றுமதி வரி விதித்தது.

அதற்கு, எதிர்பார்த்த பலன் கிட்டாததால், வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய 2024 மார்ச் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்