ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
வியாழக்கிழமை அன்று ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம், தேரா கி கலி பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர்.
இரண்டு வாகனங்களில் சென்ற வீரர்கள் மலைப்பாதையில் ஒரு வளைவுப் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இத்தாக்குதலை எதிர்கொண்ட இந்திய வீரர்கள் பதிலடி கொடுக்கத் தொடங்கினர். எனினும் வீரர்கள் சிலருக்குப் படுகாயம் ஏற்பட்டது.
இறுதியில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும் மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும் தகவலை அறிந்து மேலும் பல வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் காயமடைந்த வீரர்கள் மூன்று பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்த மேலும் ஒரு வீரர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தார். இதை யடுத்து பலி எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்தது.
தொடர்புடைய செய்திகள்
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். அப்பகுதியைச் சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.