புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக 752 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு சனிக்கிழமை (டிசம்பர் 23) காலை 8 மணியளவில் வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இவ்வாண்டு மே 21ஆம் தேதிக்குப் பிறகு, இதுவே ஆக அதிக ஒருநாள் பாதிப்பு.
கொரோனா தொற்றால் கேரளாவில் இருவர், ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்களில் தலா ஒருவர் என மேலும் நால்வர் உயிரிழந்துவிட்டதாகவும் அது கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 266 பேருக்கு இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 17 மாநிலங்களில் கொவிட்-19 தொற்று கூடியுள்ளது.
புதிய நோயாளிகளையும் சேர்த்து நாடு முழுவதும் அந்தத் தொற்று நோய்க்கு மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,420ஆக அதிகரித்துள்ளது.
டிசம்பர், ஜனவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர்காலத்தில் இந்தியாவில் கொவிட்-19 தொற்று பரவுவது ஒவ்வோர் ஆண்டும் நிகழ்ந்து வருகிறது. இவ்வாண்டும் டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் மீண்டும் இந்நோய்ப் பரவல் தலைத்தூக்கத் தொடங்கி உள்ளது.
புதிய வகை கொவிட்-19 துணைக் கிருமியான ஜேஎன்-1 தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாகப் பரவி வருகிறது. முதியோரும் இணைநோய் உள்ளோரும் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
வியாழக்கிழமை வரை 22 பேரிடம் ஜேஎன்-1 கிருமித்தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் 21 பேர் கோவாவிலும் ஒருவர் கேரளாவிலும் பாதிக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
புதிய வகை கொவிட்-19 கிருமி பரவினாலும், இதற்கு முன்னர் விதிக்கப்பட்டதைப் போன்ற பயணக் கட்டுப்பாடுகளை இப்போதைக்கு நடைமுறைப்படுத்த திட்டமில்லை என்று இந்திய அரசாங்கம் அண்மையில் தெரிவித்து இருந்தது.
அபாய அளவிற்கு கொவிட்-19 தொற்று அதிகரிப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும், வேறு உடல்நலக் குறைபாடுகள் இருப்போர் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியும்படி அது அறிவுறுத்தியுள்ளது.