ராகுல் காந்தி: மக்களின் குரலை நசுக்குகிறது மத்திய அரசு

2 mins read
479d980a-3017-4948-b23f-e590fe486e9a
அனைத்து இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவர் ராகுல் காந்தி. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறலுக்கு பிரதமர் நரேந்திர மோடியிடமும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் விளக்கம் கேட்டு குரல் எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 146 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் அந்த நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில் சனிக்கிழமை டெல்லியின் ஜந்தர் மந்தரில் இண்டியா கூட்டணியின் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் பேசுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் மத்திய அரசு நீக்கவில்லை. அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் குரலை நசுக்கி இருக்கிறது,” என்றார்.

“மக்களவைக்குள் வண்ணப் புகைக்குப்பிகளுடன் இருவர் நுழைந்துள்ளனர் என்றால் அவர்களால் வேறு பொருள்களையும் எடுத்து வந்திருக்க முடியும் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை,

“இதனால்தான் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன,” என்று இந்தியாவின் வேலையின்மையை சுட்டிக்காட்டிப் பேசினார்.

“மேலும் அவர் கூறுகையில், “நாட்டுப் பற்றாளர்கள் என்று கூறிக்கொள்ளும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அத்துமீறலின்போது அவையை விட்டு ஓடிப் போய்விட்டனர்.

“ஊடகங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என்றும் அதானிக்கு நாட்டின் சொத்தை தாரைவார்த்து விடலாம் என்றும் பாஜக அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. பாஜக அரசுடனான எங்கள் மோதல், அன்புக்கும் வெறுப்புக்கும் இடையிலான மோதல்,” என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றம் எதிர்நோக்கும் பாதுகாப்பு குறைபாட்டுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வரலாற்றில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

குறிப்புச் சொற்கள்