தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிகரிக்கும் கொவிட்- 19: இந்தியாவில் நால்வர் மரணம்

2 mins read
1983af70-6b95-4464-ab6e-8591fedfa15e
கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் அதிகரித்து வருவதாக இந்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. - படம்: இபிஏ

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 752 பேருக்கு புதிதாக கொவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய நோயாளிகளையும் சேர்த்து நாடு முழுவதும் அந்தத் தொற்று நோய்க்கு மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,420ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 17 மாநிலங்களில் உயர்ந்து வருவதாக சனிக்கிழமை சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கர்நாடகாவில் ஒருவரும், கேரளாவில் இரண்டு நபர்களும், ராஜஸ்தானில் ஒருவரும் நோய்த்தொற்றால் மாண்டதாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஎன்.1 கிருமியின் புதிய மாறுபாடு, நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புக்குப் பின்னால் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த மாறுபாட்டின் வகைகள் இதுவரை கோவாவிலும், கேரளாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் அதாவது கடந்த 28 நாள்களில் மட்டும் 850,000 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், இதில் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.

“கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கேரளாவில் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இனி வரும் நாள்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று உயர வாய்ப்புள்ளது,” எனக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்