புதுடெல்லி: சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங்கும் மல்யுத்த விளையாட்டில் இனி ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிவரும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக வீரேந்தர் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் தனது பத்மஸ்ரீ விருதையும் திரும்ப ஒப்படைக்கப் போவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள வீரேந்தர் சிங், “எனது சகோதரியும், இந்திய நாட்டின் மகளுமான சாக்ஷி மாலிக்குக்காக எனது பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைக்கிறேன்.
“பிரதமர் மோடி ஜி, உங்களின் மகளும், எனது சகோதரியுமான சாக்ஷி மாலிக்கை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
“இந்த விவகாரத்தில் நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் தங்களின் முடிவை தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாலியல் புகாருக்கு உள்ளாகி இப்போது பிணையில் விடுவிக்கப்பட்ட பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமான சஞ்சய் சிங், டிசம்பர் 21ஆம் தேதி நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மல்யுத்த கூட்டமைப்புக்கு தலைவரானார். அதற்கு மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள், அரசியல் தலைவர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீண்டும் செயல்படுவதற்கு மல்யுத்த வீராங்கனைகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்று உலக மல்யுத்த கூட்டமைப்பு நேற்று (டிசம்பர் 23) தெரிவித்துள்ளது.
குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாததால் 2023 ஆகஸ்ட் மாதம் உலக மல்யுத்த கூட்டமைப்பால் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.