ஐயப்ப பக்தர்களுக்கு குடிநீர், உணவு வழங்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

ஐயப்ப பக்தர்களுக்கு குடிநீர், உணவு வழங்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

2 mins read
2ac91bb0-6232-41cb-b316-10e6ed4ae1a7
ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு வகைகளை வழங்க கேரள நீதிமன்றம் உத்தரவிட்டது. - படம்: இந்திய ஊடகம்

கொச்சி: ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு வகைகளை வழங்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாள்களாக சபரி மலை செல்லும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நெரிசலைக் குறைக்க வைக்கம் பகுதியிலேயே பக்தர் களின் வாகனங்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

இதை கண்டித்து பக்தர்கள் திங்கட்கிழமை (டிசம்பர் 25) போராட்டம் நடத்தினர். சுமார் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை வாகனங்கள் நெரிசலில் சிக்குகின்றன. ஆங்காங்கே ஐயப்ப பக்தர்கள் குடிநீர், உணவு இன்றித் தவிப்பதாக மின்னணு ஊடகங்கள், நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தச் செய்திகளை அடிப்படையாக வைத்து கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், கிரிஷ் அமர்வு முன்பு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் குடிநீர், உணவு இன்றி பரிதவிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதில் சிறாரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐயப்ப பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ள இடங்களில் அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு வகைகளை கோவில் நிர்வாகம் வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும் இணைந்து போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.

“முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களால் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. இதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்வு காண வேண்டும்,” என்று உத்தரவிட்டனர்.

இது குறித்து கேரள காவல்துறை வட்டாரங்கள் கூறும்போது, “சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாள்தோறும் சுமார் 90,000 பேர் முன்பதிவு செய்து வருகின்றனர். சுமார் 10,000 பேர் சபரிமலைக்கு வந்து முன்பதிவு செய்கின்றனர். சுமார் 20,000 பேர் எவ்வித முன்பதிவும் செய்யாமல் நுழைகின்றனர். இதனால் அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. முன்பதிவு செய்யாமல் வருபவர்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,’’ என்று தெரிவித்தன.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் நிருபர்களிடம் பேசியபோது, “கடந்த ஞாயிற்றுக்கிழமை 1.2 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்தனர்.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. வாகனங்கள் நிறுத்தும் வசதியை விரிவுபடுத்தி உள்ளோம். முதலில் சுமார் 7,000 வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 8,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது,” என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்