‘இண்டியா’ கூட்டணி பிரதமர் வேட்பாளராக கார்கே: ஒதுங்கிய நிதிஷ்குமார்

‘இண்டியா’ கூட்டணி பிரதமர் வேட்பாளராக கார்கே: ஒதுங்கிய நிதிஷ்குமார்

2 mins read
f5cab4c7-4a98-423d-b5db-9afcd23f0a36
பிரதமர் மோடி, மல்லிகார்ஜுன கார்கே. - படங்கள்: ஊடகம்

புதுடெல்லி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

கார்கே தலித் தலைவராக அறியப்பட்டவர் என்பதும் எந்தவித சர்ச்சையிலும் சிக்காதவர் என்பதும் அவரது பலங்களாகக் கருதப்படுகின்றன.

மேலும், கர்நாடகாவில் அவருக்குள்ள செல்வாக்கு அங்குள்ள தொகுதிகளைக் கைப்பற்ற உதவும் என்றும் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குத் தலைமையேற்று அவர் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருவதையும் அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“தற்போதுள்ள அரசியல் சூழலில் மல்லிகார்ஜுன கார்கேதான் சிறந்த தேர்வாக இருக்க முடியும்,” என அரசியல் விமர்சகர் நீர்ஜா சௌத்ரி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில், கார்கே போன்ற தலைவரை எதிர்க்கட்சி வேட்பாளராக முன்னிறுத்துவது தென் மாநிலங்களில் இண்டியா கூட்டணி அதிக தொகுதிகளைக் கைப்பற்ற உதவும் என கூட்டணிக் கட்சியினர் கூறுகின்றனர்.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பெயரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் முன்மொழிந்தனர்.

எனினும் இந்தத் தேர்வை கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை.

கார்கேவின் பெயர் முன்மொழியப்பட்டதும் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இண்டியா கூட்டணியில் தாம் எந்த பதவியையும் விரும்பவில்லை என்றும் பிரதமர் வேட்பாளராக கார்கேயின் பெயர் முன்மொழியப்பட்டதில் தமக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்றும் தெரிவித்து முதல்வர் நிதிஷ்குமார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி, தொலைபேசி வழி நிதிஷ்குமாரை தொடர்புகொண்டு பிரதமர் வேட்பாளர் குறித்து விளக்கமளித்ததாக இண்டியா டுடே ஊடகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கார்கேவுக்கு மதிமுக தலைவர் கோபால்சாமி ஆதரவு தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அவர், அக்கூட்டணியின் தலைவரான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய ஒப்புதல் இன்றி ஆதரவு தெரிவித்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் அரசியல் கவனிப்பாளர்கள்.

நடப்பு பிரதமர் மோடியை எதிர்த்து, அவருக்கு நிகரான தலைவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே இண்டியா கூட்டணிக்கு தேர்தல் களத்தில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள்.

பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தியைக் களமிறக்க வேண்டும் என்ற கருத்தும் கூட்டணித் தலைவர்கள் மத்தியில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்