டெல்லி இஸ்ரேலிய தூதரகத்தின் அருகே வெடிச்சத்தம்; இஸ்ரேல் எச்சரிக்கை

2 mins read
fba8a6be-712e-4e51-bd53-eec690b3725b
புதுடெல்லியில் இஸ்ரேலியத் தூதரகத்திற்கு பின்புறம் வெடிப்புச் சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிடும் காவல்துறை அதிகாரிகள். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லியில் சாணக்கியபுரி பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு பின்னால் உள்ள ஒரு மனையில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து அங்கு குவிந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவ்விடத்தைச் சோதனையிட்டனர். அப்போது அவ்விடத்தில் இருந்து இஸ்ரேல் கொடியால் சுற்றப்பட்ட கடிதம் ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் உள்ள இஸ்ரேலிய மத வழிபாட்டுக் கூடம், இஸ்ரேலியர்கள் அதிகம் புழங்கும் இடங்களில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு அந்நாடு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், இஸ்ரேலியர் என்பதை காட்டிக்கொள்வதைத் தவிர்க்கும்படியும் இஸ்ரேல் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அண்மையில், குஜராத் அருகே சென்ற கப்பல் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து வந்த டிரோன் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கப்பல் மும்பை துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டு சோதனையிடப்பட்டு வருகிறது.

கப்பல் தாக்குதல் நடந்த சில தினங்களில் டெல்லி இஸ்ரேலிய தூதரகம் அருகே வெடிச் சத்தம் கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இஸ்ரேலியர்கள் வாழும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,’‘இஸ்ரேல் தூதரகத்திற்குப் பின்புறம் அதிசக்தி வாய்ந்த பட்டாசு வெடிக்கப் பட்டுள்ளது. இது ஒரு கவன ஈர்ப்புச்செயலாகவும் எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் இந்தப் பட்டாசு வெடிப்பு நடத்தப்பட்டிருக்கலாம்,” என்றார்.

சம்பவத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கடிதத்தில் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுகுறித்த முழு விவரம் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்