புதுடெல்லி: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மீண்டும் இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தைப் போல் புதிய பயணம் ஒன்றைத் தொடங்க உள்ளார்.
இது குறித்து அக் கட்சியின் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ஜனவரி 14ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் பயணம் தொடங்கவுள்ளார். ஆனால் இந்த முறை பேருந்துப் பயணம் என்று கூறப்படுகிறது.
அந்த ஒற்றுமை நடைப்பயணம் இந்தியாவுக்கான நியாயம் கேட்கும் நடைப் பயணம் என்ற பெயரை காங்கிரஸ் செயல் குழு ஒரு மனதாக முன்மொழிந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
காங்கிரசின் நியாயம் கேட்கும் நடைப் பயணம் 14 மாநிலங்கள் மற்றும் 85 மாவட்டங்களில் 6,200 கி.மீ. தொலைவுக்கு நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. இது, காங்கிரஸுக்கும், இண்டியா கூட்டணிக்கும் புத்துணர்வு தரும் யாத்திரையாக அமையும் என்று திரு வேணுகோபால் கூறினார்.
அந்தப் பயணத்தை ராகுல் காந்தி இந்தியாவின் கிழக்கில் தொடங்கி, மேற்கில் முடிப்பார். வன்முறைச் சம்பவங்களால் மிகவும் பாதிப்புக்குள்ளான மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கும் இந்த நடைப்பயணம், நாகலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 14 மாநிலங்களின் வழியே சென்று இறுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் மார்ச் 20ஆம் தேதி முடிவடையும் என்று வேணுகோபால் தெரிவித்தார்.
ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை’ என்கிற பெயரில் நடைப் பயணம் மேற்கொண்டார். அந்த நடைப் பயணம் கடந்த 2022 செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி ஜனவரி 2023-ல் ஸ்ரீநகரில் நிறைவுபெற்றது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து ராகுல் காந்தியின் நீண்ட நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பிரிவினைவாத அரசியலுக்கு எதிராகவும், சமத்துவமின்மை, வேலை வாய்ப்பின்மை போன்ற சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்காகவுமே இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை ராகுல் காந்தி நடத்தியதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.