தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அயோத்தி விமான நிலையத்திற்கு வால்மீகியின் பெயர்

2 mins read
a41a996c-f114-4bf3-b64b-c82add795f74
ரூ1,450 கோடி செலவில், 6,500 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

அயோத்தியில் சனிக்கிழமை (டிசம்பர் 30) திறக்கப்படும் புதிய விமான நிலையத்திற்கு, ‘மகரிஷி வால்மீகி அனைத்துலக விமான நிலையம் அயோத்தியாதாம்’ என பெயரிடப்படவுள்ளது.

இது முன்னர், ‘மர்யதா புர்ஷோத்தம் ஸ்ரீ ராம் அயோத்தி அனைத்துலக விமான நிலையம்’ என்று அழைக்கப்பட்டது. தற்போது, ராமாயணத்தை எழுதிய வால்மீகியின் பெயர் சூட்டப்படவுள்ளது. இங்கு ரூ1,450 கோடி செலவில், 6,500 சதுர அடி பரப்பளவில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது.

எல்இடி விளக்குகள், மழை நீர் சேகரிப்பு, நீரூற்றுகளுடன் கூடிய நில வடிவமைப்பு, நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய சக்தி நிலையம் போன்ற பல்வேறு நீடித்த நிலைத்தன்மை அம்சங்களை புதிய முனையம் கொண்டுள்ளது.

ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கிற்கு முன்னதாக டிசம்பரில் பிரதமர் மோடி இந்த விமான நிலையத்தைத் திறந்து வைக்கிறார்.

மோடியின் வருகையை முன்னிட்டு அயோத்தி நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அயோத்தி பயணத்தின்போது அவர் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

மும்பை, டெல்லி, அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு விமானச் சேவை இயங்கும். இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள் விமானச் சேவையை வழங்குகின்றன.

இது உத்தரப் பிரதேச மாநிலத்தின் 10வது விமான நிலையம் ஆகும்.

அடுத்த ஆண்டு மேலும் ஒன்பது விமான நிலையங்கள் இம்மாநிலத்தில் அமைக்கப்படும். அதன்மூலம் 19 விமான நிலையங்களாக உயரும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அஜாம்கார், அலிகார், மொராதாபாத், ஷ்ரவஸ்தி, சத்ரகூட் ஆகிய இடங்களில் தலா ஒன்று என ஐந்து விமான நிலையங்கள் திறக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதி ராதித்யா சிந்தியா கூறினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாடு முழுவதும் 75 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 2030க்குள் விமான நிலையங்களின் எண்ணிக்கை 200ஐ தொடும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்