பெங்களூர்: ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் சார்பில், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே முன்மொழியப்பட்டிருக்கும் நிலையில் சித்தராமையா இவ்வாறு கூறியுள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே பிரதமராக முன்மொழியப்பட்டதில் பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு அதிருப்தி எனக் கூறப்பட்டது. ஆனால், அதில் தனக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை என்று கூறி அந்தப் பேச்சுக்கு நிதிஷ் குமார் முற்றுப்புள்ளி வைத்தார். இப்போது புதிய சர்ச்சையை சித்தராமையா கிளப்பியுள்ளார்.
பெங்களூரில் வியாழக்கிழமை நடந்த காங்கிரசின் 139வது நிறுவன தின நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “இந்தியாவின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. அதற்கு ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வர வேண்டும்,” என்று கூறினார். 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பும், ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என சித்தராமையா களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

