தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அயோத்தி ராமர் கோவிலுக்கு ஏழு நாள் குடமுழுக்கு விழா

2 mins read
f42dad01-7b8e-4399-9f62-4d440012b953
அயோத்தி ராமர் கோவிலில் 600 கிலோ எடை கொண்ட கல்வெட்டுடன் கூடிய உலோக மணி நிறுவப்படவுள்ளது (உள் படம்). - படம்: இணையம்

அயோத்தியில் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் அனைத்துப் பணிகளும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் முடிவடைந்து ஜனவரி 16ஆம் தேதியிலிருந்து குடமுழுக்கு விழா தொடங்க உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறும்.

ஜனவரி 16ம் தேதி முதல் நடைபெறும் நிகழ்வுகளின் ஏழு நாள் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 22ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவில் ராம் லாலா பிரதிஷ்டை 84 நொடிகளில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே உட்பட முக்கிய தலைவர்களுக்கு குடமுழுக்குக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. எனினும், அவர்கள் பங்கேற்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

துறவிகள், அறிவியல் அறிஞர்கள், ராணுவ அதிகாரிகள், பத்ம விருது பெற்றவர்கள், தொழில் அதிபர்கள், தலாய் லாமா, பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குடமுழுக்கு விழாவுக்குச் செல்லாதவர்கள் இந்து விரோதிகள் அல்ல

இந்நிலையில் குடமுழுக்கு விழாவுக்குச் செல்லாதவர்கள் இந்து விரோதிகள் அல்ல என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.

‘’கோயிலுக்குச் செல்வது என்பது தனிநபரின் முடிவுக்கு உட்பட்டது. தனிப்பட்ட முறையில் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தால், அது குறித்து அவர் தனிப்பட்ட முறையில் முடிவு எடுப்பார்.

“குடமுழுக்குக்குச் செல்லப் போவதில்லை என சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறி இருக்கிறார்.

அயோத்தி கோயில் விவகாரத்தில் கட்சி கூட்டாக ஒரு முடிவை எடுக்குமானால், அது அனைவருக்கும் தெரிவிக்கப்படும். தற்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2,3 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொறுத்தமான முறையில் பொறுத்தமான நேரத்தில் அவர்கள் முடிவெடுப்பார்கள்.

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை அரசியலோடு முடிச்சிப் போடுவது சரியல்ல. ஒரு அரசியல் நிகழ்வுக்குச் செல்லாதவர் இந்து விரோதி ஆக மாட்டார். இவ்விஷயத்தில் பெட்டிக்குள் அடைப்பதைப் போன்று காங்கிரஸ் கட்சியை அடைக்க முடியாது. குடமுழுக்குக்கு செல்லாதவர்களை இந்து விரோதிகள் என முத்திரை குத்த முடியாது. இவ்விஷயத்தை சம்பந்தப்பட்டவர்களின் முடிவுக்கு விட்டுவிடுவோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அழைப்பு அனுப்பப்பட்டவர்கள் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்