அகமதாபாத்: குஜராத்தின் சௌராஷ்ட்ரா பகுதிக்கு உட்பட்ட அரபிக் கடல் பகுதியில் துவாரகா நகர் அமைந்துள்ளது.
அரபிக் கடலில் மூழ்கியதாக நம்பப்படும் துவாரகா நகரை நீர்மூழ்கியில் சென்று பார்வையிடும் ஆன்மீக சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.
அரபிக் கடலில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரை பார்வையிட சிறப்பு நீர்மூழ்கியை தயாரிக்க மும்பையை சேர்ந்த மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று குஜராத் சுற்றுலாத் துறை முதன்மை செயலாளர் ஹரித் சுக்லா தெரிவித்துள்ளார்.
“இந்த நீர்மூழ்கி குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். ஒரு நேரத்தில் 30 பேர் நீர்மூழ்கியில் பயணம் செய்யலாம். இதில் 24 சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். அவர்களுடன் 2 மாலுமிகள், 2 நீச்சல் வீரர்கள், ஒரு வழிகாட்டி, ஒரு தொழில்நுட்ப நிபுணர் பயணம் செய்வார்கள்,” என்று ஹரித் சுக்லா கூறினார்.
“மேலும் அவசர கால தேவைக்கான மருந்துகள், உயிர்வாயு முகக்கவசம், நீச்சல் உடைகள் உள்ளிட்ட உயிர் காக்கும் கவசங்கள் நீர்மூழ்கியில் இருக்கும். கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்க அதிநவீன தொலைத்தொடர்பு வசதிகள் அமைக்கப்படும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடலுக்கு அடியில் 300 அடி ஆழத்தில் நீர்மூழ்கி பயணம் செய்யும். சுற்றுலா பயணிகள் துவாரகா நகரின் அழகை ரசிக்க நீர்மூழ்கியில் கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டிருக்கும். துவாரகா நகரம் மட்டுமன்றி கடல்வாழ் உயிரினங்களையும் கண்டு ரசிக்க முடியும். வரும் கிருஷ்ண ஜெயந்தி அல்லது தீபாவளி பண்டிகையின்போது நீர்மூழ்கி ஆன்மீக சுற்றுலா திட்டம் தொடங்கப்படும் என்று ஹரித் சுக்லா தெரிவித்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை கடலுக்கு அடியில் துவாரகா நகரம் குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய அலோக் திரிபாதி எழுதிய நூலில் மிகப்பெரிய துறைமுகமாக துவாரகா இருந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் கல் நங்கூரங்கள் கிடைத்ததாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் பிரம்மாண்ட சுவர், வட்ட வடிவிலான கல் அமைப்பு, வெண்கலம், செம்பு, இரும்பு, மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன என்றும் அவர் எழுதியிருந்தார்.

