தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவனைக் கட்டிப்பிடித்து முத்தம்; பள்ளி முதல்வர் பணியிடைநீக்கம்

1 mins read
9c7a50e6-162a-43ed-9a58-11a6de55eded
10ஆம் வகுப்பு மாணவருடன் பள்ளி முதல்வர் புஷ்பலதா நெருக்கமாக இருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன. - படம்: அமித் சிங் ரஜாவத்/எக்ஸ்

பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலம், சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவருடன் பள்ளி முதல்வர் ஒருவர், நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள முருகமல்ல கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு உயர்நிலைப் பள்ளியின் முதல்வராக புஷ்பலதா என்பவர் பணியாற்றி வருகிறார்.

அண்மையில் அவரது நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. அவர் மாணவர்களுடன் நெருக்கமாக பழகுவதாகச் சொல்லப்படுவதே இதற்குக் காரணம்.

சில நாள்களுக்கு முன்பு கல்வி ஆய்வு சுற்றுலாவுக்கு மாணவர்களுடன் புஷ்பலதா, 42, சென்றார்.

அப்போது 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவருடன் அவர் நெருக்கமாக ‘போட்டோ ஷூட்’ நடத்தியிருக்கிறார். இது தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் கடந்த புதன்கிழமை கசிந்த நிலையில், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோ ஷூட்டில் அந்த மாணவர், புஷ்பலதாவை கன்னத்தில் முத்தமிட்டும் அவரைக் கட்டிப்பிடித்து தூக்கியும் இருக்கிறார்.

இந்த படங்கள் குறித்து பலதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“பள்ளியில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் இப்படியெல்லாம் நெருக்கமாக இருப்பது நியாயமா?” என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரின் கவனத்துக்குச் சென்ற நிலையில், அவர்கள் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து விசாரணை தொடங்கிய கல்வித்துறை, முதற்கட்டமாக புஷ்பலதாவை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்