அயோத்தி: அயோத்தியில் 40 மில்லியன் வெள்ளி செலவில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தையும், 240 மில்லியன் வெள்ளி செலவில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை திறந்து வைத்தார்.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் குடமுழுக்கு ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அயோத்தி ராமர் கோவில் நாட்டின் மிகப் பெரிய கலாச்சார மையமாகத் திகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடமுழுக்கு மற்றும் அதனைத் தொடர்ந்து அயோத்திக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதால், அங்கு ஏற்கனவே சிறிய அளவில் இருந்த ரயில் நிலையம் 40 மில்லியன் வெள்ளி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலைய திறப்பு விழாவில், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மகரிஷி வால்மீகி அனைத்துலக விமான நிலையம்
புதிதாகக் கட்டப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி அனைத்துலக விமான நிலையம் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 1 மில்லியன் பயணிகளைக் கையாளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய முனைய கட்டடத்தின் முகப்பு அயோத்தி ராமர் கோயில் கட்டடத்தை சித்திரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பயணிகளின் வசதிக்காக விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் பல நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.
ரூ.15,000 கோடி வளர்ச்சித் திட்டம்
தமது அயோத்தி பயணத்தின் போது பிரதமர் மோடி அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.11,100 கோடி வளர்ச்சி திட்டங்களை அறிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. மேலும் உத்தரப் பிரதேசம் முழுவதும் உள்ள பிற திட்டங்கள் தொடர்பாக கிட்டத்தட்ட ரூ.4,600 கோடி மதிப்பிலான திட்டங்களையும் மோடி அறிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.