லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பல்கலைக்கழக மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டம் நடத்தியும் குற்றவாளிகளை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூவரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். குனல் பாண்டே, அபிஷேக் சவுகான், சக்ஷன் பட்டேல் என்ற அம்மூவரும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் எனக் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, பாலியல் வன்கொடுமை தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக பாஜக அறிவித்துள்ளது. அந்த மூவர் அக்கட்சியின் ஐடி பிரிவு நிர்வாகிகளாகச் செயல்பட்டு வந்தனர்.
கடந்த நவம்பர் 1ஆம் தேதி பின்னிரவு 2 மணிக்கு ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவரை மூன்று ஆடவர்கள் வலுக்கட்டாயமாகப் பிடித்து முத்தமிட்டனர். அத்துடன் அவரது ஆடைகளைப் பிடித்து இழுத்து அவரைக் காணொளியில் பதிவு செய்தனர்.
பாலியல் வன்கொடுமைக்கு முன்னர் தம்மைக் கொடூரமாக அவர்கள் தாக்கினர் என்றும் அந்த மாணவி தமது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் செய்தால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டி அவரது கைப்பேசியையும் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.