இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் தௌபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் பகுதியில் ஜனவரி 1ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர்; ஐந்து பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த ஐந்து பேரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதை மூத்த காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து, தௌபால், கிழக்கு இம்பால், மேற்கு இம்பால், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், லிலாங் பகுதிக்குள் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று புகுந்தது. அந்தக் கும்பல் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவரை அச்சுறுத்தி பணம் பறிக்க முயன்றதாகவும் பின்னர் அங்கு கூடிய மக்கள் அந்தக் கூட்டத்தினரை விரட்டியடித்த போது அந்தக் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
புத்தாண்டை ஒட்டி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி மணிப்பூரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இப்போது புதிதாக நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து ஊரடங்கு தளர்வு உத்தரவை மணிப்பூர் மாநில அரசு மீட்டுக் கொண்டுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவத்தை அம்மாநில முதல்வர் பிரேன் சிங் கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த வன்முறைச் சம்பவத்தை அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் விரைவில் கைதுசெய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
“இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையில் மக்கள் வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. அவர்கள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குப் பொதுமக்கள் வன்முறையில் இறங்காமல் அரசுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் மக்கள், அங்கு பல வாகனங்களுக்குத் தீ வைத்துள்ளனர். அந்த வாகனங்கள் அரசுக்குச் சொந்தமானவையா என்ற விவரம் தெரியவில்லை.
இதேபோல், கடந்த சனிக்கிழமை இரு பிரிவினருக்கு இடையே நடந்த தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பலைச் சேர்ந்த சிலரை உள்ளூர் மக்கள் பிடித்து வைத்துள்ளதாகவும் அவர்களை காவல்துறையினர் விரைவில் கைது செய்து விசாரணை மேற்கொள்வர் என்றும் கூறப்படுகிறது.
மேலும், தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின்போது எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில் அரசு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மணிப்பூரில் கடந்த மே 3ஆம் தேதி மைத்தேயி மற்றும் குக்கி சமூகத்தினருக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அந்தக் கலவரத்தில் இதுவரை 180க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

