பெங்களூர்: பாரதிய ஜனதா கட்சியினர் கோவில்களை கட்டியது போதும். ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் பணிகளை செய்ய வேண்டும். நாட்டில் பல இடங்களில் மிருகங்களைபோல் மக்கள் தகுதியற்ற இடங்களில் வாழ்கிறார்கள். அத்தகையோருக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று கர்நாடகா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆஞ்சனேயா கூறினார்.
சித்ரதுர்கா என்னுமிடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், முதல்வர் சித்தராமையாவை அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பாஜக அரசு அழைப்பு விடுக்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஆஞ்சனேயா, முதல்வர் சித்தராமையாவை அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அழைக்காதது ஒரு வகையில் நல்லதே. ஏனெனில் முதல்வர் தனது பெயரிலேயே ராமரைக் கொண்டுள்ளார்.
இவ்வாறு இருக்க அவர் எதற்காக அயோத்திக்குச் சென்று அந்த ராமரை வழிபட வேண்டும்? சித்தராமையாவின் சொந்த ஊரான சித்தராமனஹுன்டி கிராமத்தில் அவர் ராமர் கோவிலை கட்டியுள்ளார். அவர் அங்கு வழிபாடு செய்வார்.
அயோத்தி கோவிலில் இருப்பது பா.ஜனதாவின் ராமர். அதனால் பா.ஜனதாவினரை அழைத்து பஜனை செய்கிறார்கள். ஆனால் எங்கள் ராமர் எல்லா இடங்களிலும் உள்ளார். எங்களின் இதயத்திலும் உள்ளார். நான் ஆஞ்சனேயா. ஆஞ்சனேயா என்ன செய்தார் என்பது உங்களுக்கு தெரியும் இல்லையா? எங்கள் சமூகத்தினர் ராமர், ஆஞ்சனேயா, ஹனுமந்தா என்று பெயரிடுகிறார்கள்.
அஞ்சனேயா எங்கள் சமூகத்தை சேர்ந்தவர். பா.ஜனதா மதங்களை பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றுகிறது. ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக பேசி மக்களிடம் வாக்குகளைப் பெற பாஜக முயற்சி செய்கிறது. அவர்களின் ஆட்சியில் யாருக்குப் பயன் கிடைத்தது? மத்திய பா.ஜனதா ஆட்சியில் இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஏதாவது நன்மைகள் ஏற்பட்டுள்ளதா என்று ஆஞ்சனேயா கேள்வி எழுப்பியுள்ளார்.

