புதுடெல்லி: சீன நாட்டு நிறுவன ஊழியர்களுக்கு விசா பெறுவதற்காக வேதாந்தா குழும நிறுவனத்திடம் இருந்து ரூ.50 லட்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செவ்வாய்க்கிழமை முன்னிலையானார்.
மின்சாரம், எஃகு ஆகிய துறையில் புதிய உற்பத்தி ஆலைகள் தொடங்குவதற்கு ‘புராஜெக்ட் விசா’ விதிமுறைகள் கடந்த 2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. ஆனால் இந்த விசாக்களை மீண்டும் பயன்படுத்த முடியாது. எனினும், விதிவிலக்குள்ள விசா விண்ணப்பங்களுக்கு உள்துறை செயலாளர் அனுமதியுடன் மீண்டும் விசா வழங்குவது குறித்து பரிசீலிக்க விதிகள் உள்ளன.
அப்போது வேதாந்தா குழுமத்தின் தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் (டிஎஸ்பிஎல்) என்ற நிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்தி மையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது.
ஆனால் இந்தப் பணிகள் முடிய காலதாமதமானது. இதனால் சீன நிறுவனத்தின் 263 ஊழியர்களுக்கு புராஜெக்ட் விசாவை மீண்டும் பயன்படுத்தும் அனுமதியை உள்துறை அமைச்சிடம் இருந்து பெற்றுத் தர கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது கூட்டாளி பாஸ்கர ராமன் ஆகியோரின் உதவியை வேதாந்தா குழுமத்தின் ஊழியர் ஒருவர் நாடியதாகக் கூறப்படுகிறது. அதற்காக கார்த்திக் சிதம்பரத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டதாக சிபிஐ குற்றம் சுமத்தியது.
சிபிஐ புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை நிதி மோசடி வழக்குப் பதிவு செய்து சிவகங்கை கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் செவ்வாய்க்கிழமை முன்னிலையானார்.
“அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம்,” சீன ஊழியர் ஒருவருக்குக் கூட நான் விசா பெற்றுத் தர உதவவில்லை. இந்த வழக்கு என்னைத் தொந்தரவு செய்யும் நடவடிக்கை. எனது தந்தையை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அமலாக்கத் துறை விசாரணையில் சம்பந்தம் இல்லாத கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டன.
“தேர்தல் நெருங்கும் வேளையில் இவ்வாறு நடப்பது இயல்பானதே. இதனை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக அமலாக்கத்துறை விசாரணை குறித்து கார்த்தி சிதம்பரம், “இது வலை போட்டு மீன் பிடிப்பது போன்ற விசாரணையாகும். எனது தரப்பில் விசாரணையில் கேட்ட குறிப்புகளை அளித்துவிட்டேன். இந்த வழக்கு வேண்டுமென்றே பதியப்பட்டது. நாங்கள் விசா செயல்முறையின் போது ஒரு சீன நாட்டவரைக் கூட சட்ட விரோதமாக அனுமதிக்கவில்லை,” என்றார்.
2011ஆம் ஆண்டு கார்த்தி சிதம்பரம் உள்துறை அமைச்சில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.இந்த வழக்கில் கார்த்திக் சிதம்பரம் கணக்காளர் பாஸ்கர ராமன் மற்றும் தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்த சிபிஐ வழக்கின் அடிப்படையில், பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை, கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
கார்த்தி சிதம்பரம் மீது சீன விசா பண மோசடி, ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல் மேக்ஸிஸ் என மூன்று பண மோசடி வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.