தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாதியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தூக்கில் தொங்கவிட்ட காவலர்

2 mins read
186d2276-3b37-4c5a-87c9-2f26f050b74c
உத்தரப் பிரதேசத்தில் காவலர் ஒருவர், தன் காதலியைக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

ஆக்ரா: ஒரு காவலர் தான் வாடகைக்குக் குடியிருந்த வீட்டில், தன் தோழியை வன்கொடுமை செய்து கொன்று தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தையே உலுக்கியுள்ளது. ஆக்ராவின் அருகேயுள்ள பெலன்கஞ்ச் என்னும் சிற்றூரில்தான் இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒரு வீட்டின் கூரையில் பெண் பிணமாக தூக்கில் தொங்குவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவலர்கள், சம்பவம் நடந்த அந்த இடத்திற்குச் சென்று தூக்கில் பிணமாகத் தொங்கிய பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

உடற்கூறாய்வில் அந்தப் பெண் தூக்கில் தொங்கவிடப் பட்டதால் மரணம் நிகழ்ந்ததாக உறுதி செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

குருகிராம் மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரிந்து வந்தார் அந்த 25 வயதுப் பெண். அவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அந்தக் காவலர் ஜான்சியை சேர்ந்தவர் என்றும், அங்கு இளம்பெண்ணும், அவரது சகோதரரும் தாதியர் பயிற்சி பெற்றபோது இருவருக்கும் அந்தக் காவலருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

சம்பவம் நடந்த அன்றைக்கு அந்த வீட்டில் குடியிருந்த காவலர் ராகவேந்திர சிங், காவல் நிலையத்தில் சீக்கிரம் பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அவரைப் பார்ப்பதற்காக அவரது தோழி அங்கு வந்துள்ளார். அப்போது அந்தக் கொடூரச் சம்பவத்தை அந்தக் காவலர் செய்ததாகத் தெரிகிறது.

பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்தக் காவலர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து பெண்ணின் சகோதரர் கூறும்போது, “நானும்கூட ராகவேந்திரா சிங்கின் வீட்டிற்கு சென்று வந்துள்ளேன். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இருந்தும் தது சகோதரியை திருமணம் செய்து கொள்ள ராகவேந்திரா சிங் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும், இருந்தபோதிலும் தது சகோதரியுடன் அவர் பழகி வந்தார்” என்றார்.

அந்தப் பெண் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அந்த இளம்பெண் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து ராகவேந்திரா சிங்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்